சிறுவன் உள்பட 2 பேர் பலி; 31 பேர் படுகாயம்
சிறுவன் உள்பட 2 பேர் பலி; 31 பேர் படுகாயம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சாலையோரம் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
வேளாங்கண்ணிக்கு வந்தனர்
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 51 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவாக ஒரு ஆம்னி பஸ்சில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு -மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு கீழையூர் கொல்லங்கோவில் ஆர்ச் அருகே பஸ் சென்ற போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. உடனே பஸ்சில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக பொக்லின். எந்திரத்தை கொண்டு பஸ்சை நிமிர்த்தி பஸ்சுக்கு அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் ஒரத்தநாடு போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறுவன் உள்பட 2 பேர் பலி
இந்த விபத்தில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜிம்மிஜாாஜ் மகன் ஜெரால்டுஜிம்மி(வயது9), புலிக்கான்வர்கீஸ் மனைவி லில்லி (60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் மேரி (54), அஜித் (24), ஜுடின் (5), உள்ளிட்ட 31 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவா்களுக்கு சிகிச்்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான சிறுவன் மற்றும் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த சிறுவன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.