வேன் மீது லாரி மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி


வேன் மீது லாரி மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி
x

வேன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வேன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இருக்கன்குடி கோவிலுக்கு வந்தனர்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டம் புளியங்குடி வளர்ந்தான் தெருவை சேர்ந்த ஈசுவரன் தனது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் ஒரு மினி வேனில் வந்தார்.

மினி வேனை டிரைவர் சுந்தரமூர்த்தி (வயது 45) ஓட்டினார். விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறை கிராமத்தில் சனீஸ்வரன் கோவில் அருகே வந்தபோது, மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடத்திற்கு வந்திருந்த டிப்பர் லாரி, திடீரென மோதியதில் வேன் கவிழ்ந்தது.

2 பேர் பலி

இந்த விபத்தில் வேனில் இருந்த ராஜதுரை மகன் கபிலேஷ்குமார் (8) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

டிரைவர் சுந்தரமூர்த்தி உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் முகேஷ் பிரியா, கிருஷ்ணா லீலாவதி, மனோஜ், தினேஷ், முத்தாஸ்ரீ, மதுரேசன், ராணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு செல்லும் வழியில் கிருஷ்ணா லீலாவதி (28) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 16 பேருக்கும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான குமரி மாவட்டம் ஆயிரம் குருவிவிளை கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (32) என்பவரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறி்த்து சாத்தூர் துணை சூப்பிரண்டு நாகராஜ், ஏழாயிரம் பண்ணை சப்- இன்ஸ்பெக்டர் ெசய்யது இப்ராகிம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.


Related Tags :
Next Story