வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவர்உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவர்உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு சம்பவத்தில் கேரள வாலிபர் திடீரென இறந்தார்.
வெவ்வேறு சம்பவத்தில் கல்லூரி மாணவர்உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு சம்பவத்தில் கேரள வாலிபர் திடீரென இறந்தார்.
கல்லூரி மாணவர்
சமயபுரம் அருகே உள்ள ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் திவாகர் (வயது 18). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் திவாகர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரான மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.
விவசாயி
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் வய திருப்பஞ்சலி குடித்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் ராகுல் (வயது 24). டிப்ளமோ படித்துள்ள இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இரவில் மீண்டும் வீடு திரும்பினார். திருச்சி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அருகே உள்ள மான்பிடிமங்கலம் என்ற இடம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
கேரள வாலிபர் திடீர் சாவு
கேரள மாநிலம் எர்ணாகுளம், திருவான்யூரை சேர்ந்தவர் சிரில் ராஜ் (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த இவர் தனது நண்பர்களான விஷ்ணு மற்றும் பிஜு ஆபிரகாம் ஆகியோருடன் ஒரு வாடகை காரில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு பின்பு அங்கிருந்து மீண்டும் கேரளா நோக்கி சென்றார்.
கார் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே சென்று கொண்டிருந்த போது சிரில்ராஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.