வெவ்வேறு சாலை விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலி
நொய்யல், தோகைமலை பகுதிகளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
முதியவர் பலி
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் ஆலமரத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை அமாவாசையை முன்னிட்டு ஆத்தூர் சோளியம்மன் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாணப்பரப்பு பிரிவு அருகே ஆத்தூர் செல்வதற்காக சாலையை கடந்தபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், சின்னப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சின்னப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கொடிக்காம் புதூரை சேர்ந்தவர் மாணிக்கம் (60). வியாபாரி. இவரது மகன் கல்யாணசுந்தரம் (40). இந்தநிலையில் நேற்று மாணிக்கம் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் பிள்ளைக்கோடங்கிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பிள்ளைகோடங்கிபட்டியை சேர்ந்த சக்திவேல் (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மாணிக்கம், கல்யாணசுந்தரம் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில், படுகாயம் அடைந்த மாணிக்கம், கல்யாணசுந்தரத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கல்யாண சுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணிக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.