கார் டிரைவரை கொன்ற நண்பர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
சேலத்தில் கார் டிரைவர் கொலை வழக்கில் அவருடைய நண்பர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம், செப்.27-
சேலத்தில் கார் டிரைவர் கொலை வழக்கில் அவருடைய நண்பர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கார் டிரைவர்
சேலம் மணியனூர் பாண்டுநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (வயது 35). இவர் நெத்திமேடு பகுதியில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் அவருக்கு சொந்தமான 3 கார்களையும் அதே டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு கொடுத்து இருந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெபினா என்ற பெண்ணை அபிஷேக் மாறன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெபினா, தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனியாக சென்றுவிட்டார். இதையடுத்து அபிஷேக் மாறன் தனது பாட்டி கண்ணம்மா மற்றும் தங்கை அபிநயாவுடன் மணியனூர் பகுதியில் வசித்து வந்தார்.
செக்ஸ் டார்ச்சரால் கொலை
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி இரவு அபிஷேக் மாறன் வீட்டின் மொட்டை மாடியில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை ெசய்யப்பட்டார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர்.
இதில் கொலையுண்ட அபிஷேக் மாறனுக்கு, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த நண்பர் பிரபாகரனின் (28) மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அபிஷேக் மாறன், நண்பரின் மனைவிக்கு அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இது பிரபாகரனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த அபிஷேக் மாறனை, பிரபாகரனும், அவரது நண்பரான எருமாபாளையத்தை சேர்ந்த அருள்குமார் (23) என்பவரும் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன், அருள்குமார் ஆகிய 2 பேரும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன், அருள்குமார் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு கூறினார்.