சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. இதனால் இளநீர் கூடு, டயர், உடைந்த பானை உள்ளிட்டவற்றில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அதன்படி கடந்த ஒரு மாதமாக தினமும் ஒன்றிரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று குட்டியபட்டியை சேர்ந்த 7 வயது சிறுமி, சக்கையநாயக்கனூரை சேர்ந்த 23 வயது பெண் உள்பட 2 பேருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. அதேநேரம் நத்தம், கொடைக்கானல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டது.
எனவே டெங்கு பாதித்த பகுதிகளில் பரிசோதனையை தீவிரப்படுத்தும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி நேற்றைய தினம் மாவட்டம் முழுவதும் 73 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரியவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.