மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வழக்கில் அரசு ஊழியர் உள்பட 2 பேர் கைது


மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வழக்கில் அரசு ஊழியர் உள்பட 2 பேர் கைது
x

பவானி அருகே மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வழக்கில் அரசு ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பவானி

பவானி அருகே மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வழக்கில் அரசு ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை பறிப்பு

பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய தாய் குஞ்சம்மாள் (வயது 94). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த குஞ்சம்மாளை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 3 பவுன் வளையல்களை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இதில் காயம் அடைந்த குஞ்சம்மாள் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

கைது

இந்த நிலையில் சித்தோடு போலீசார் மூவேந்தர் நகர் அருகே உள்ள பெரியார்நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (45), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான பாலு (47) என்பதும், நண்பர்களான அவர்கள் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்றதும்,' தெரியவந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், 'சரவணன், பாலு ஆகியோா் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். எனவே அவர்கள் குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டது. இதனால் மது குடிப்பதற்காக மூதாட்டியை தாக்கி நகையை பறித்து உள்ளனர். அதுமட்டுமின்றி சரவணன் திருப்பூர் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவதுடன், ராஜாவின் உறவினர் என்பதும்,' தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சரவணன், பாலு ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.


Next Story