பள்ளி மாணவி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
வேலூரில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
வேலூர்
வேலூரில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மாணவிக்கு டெங்கு காய்ச்சல்
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 18-வது வார்டு காந்திநகரை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் உடல் நலமாகவில்லை. அதையடுத்து பெற்றோர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்முடிவில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று 20-வது வார்டு ரங்காபுரம் பகுதியில் வசிக்கும் 65 வயது முதியவரும் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். அங்கு முதியவருக்கு செய்த ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறப்பு மருத்துவ முகாம்
பள்ளி மாணவி, முதியவரின் குடும்பத்தினருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் ரத்தமாதிரி பரிசோதனைக்காக சேகரிக்கப்படும். மேலும் 2 பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் அனைவரும் சிறப்பு முகாமில் பங்கேற்று உடல்நலத்தை பரிசோதனை செய்யும்படி மாநகராட்சி ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அதைத்தவிர சத்துவாச்சாரி காந்திநகர், ரங்காபுரம் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையாக காலை, மாலை வேளைகளில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள வீட்டின் தண்ணீர் தொட்டிகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கவும், அபேட் கரைசல் தெளிக்கவும் தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.