பெண்களிடம் நகை பறித்த ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது


பெண்களிடம் நகை பறித்த ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
x

மார்த்தாண்டம் பகுதியில் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்க பட்டன.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் பகுதியில் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்க பட்டன.

வழிப்பறி கொள்ளைகள்

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி பெண்களிடம் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்த புகார்களின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் தலைமையில் போலீசார் திக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது சந்தேக படும்படியாக 2 பேர் இருந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்த 2 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர்.

முன்னாள் ராணுவ வீரர்

அப்போது அவர்கள் முளகுமூடு வெட்டுக்காட்டுவிளையை சேர்ந்த மெர்லின் ராஜ் (வயது39), மேக்காமண்டபம் பூந்தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பது தெரிய வந்தது.

மெர்லின் ராஜ் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். ராணுவ விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் 2016-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்பு பெண்களிடம் நகை பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 11 வழிப்பறி வழக்குகள், ஒரு கொலை வழக்கு உள்பட 13 வழக்குகள் உள்ளன. தேடப்பட்ட குற்றவாளியான இவரை போலீசார் சந்தேகப்படும் நேரங்களில் ராணுவ வீரருக்கான அடையாள அட்டை காட்டி தப்பித்து கொள்வாராம். இவருடன் மணிகண்டனும் சேர்ந்து பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

20 பவுன் நகைகள் மீட்பு

இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள், கார், ஒரு ஸ்கூட்டர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மெர்லின் ராஜ் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்த போது, 'என் மீது உள்ள கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு பணம் செலவு செய்ய வழிப்பறியில் ஈடுபட்டேன். மேலும் நகைகளை பறித்து விற்பனை செய்து குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு சுற்றி திரிந்து பெண்களுடன் உல்லாசமாக இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்' என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story