பெண் உள்பட 2 பேர் கொலை; 6 பேர் படுகாயம்


பெண் உள்பட 2 பேர் கொலை; 6 பேர் படுகாயம்
x

வெம்பாக்கம் அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

வெம்பாக்கம் அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

பெண் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி ஊராட்சி பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 48). இவருடைய அண்ணன் செல்வம் (50). இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் இன்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கியுள்ளார்.

அப்போது அங்கிருந்த அழிவிடைதாங்கி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தகராறினை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், வேண்டாமிர்தத்தை கத்தியால் வெட்டியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த வேண்டாமிர்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரும்பு ராடால் தாக்கியதில் சாவு

இதில் காயமடைந்த சங்கீதா அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது எதிரில் வந்த கணவர் செல்வம் மற்றும் வேண்டாமிர்தத்தின் கணவர் வெங்கடேசன் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

அப்போது அங்கு வந்த சுப்பிரமணியன் ஆத்திரத்தில் அண்ணன் செல்வத்தையும், வெங்கடேசனையும் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார்.

அருகில் இருந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரனையும் வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சுப்பிரமணியன் வெம்பாக்கத்தில் உள்ள தனது பெரியப்பா மகனான காந்தி என்பவரின் கடைக்கு சென்று, தனது அண்ணனுடன் ஏற்பட்ட நிலப்பிரச்சினைக்கு நீதான் காரணம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டு அவரையும், அவரது மனைவி லதாவையும் கத்தியால் வெட்டியுள்ளார். அதில் காயமடைந்த காந்தி கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சுப்பிரமணியனை தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

6 பேர் காயம்

இந்த சம்பவத்தில் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story