பெண் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது


பெண் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது
x

தமிழக- ஆந்திர எல்லையில் வாணியம்பாடி அருகே பெண் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது.

திருப்பத்தூர்

மிதித்து கொன்றது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் குப்பம் அருகே மல்லானூர் என்ற கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் இருந்து விரட்டப்பட்ட இரண்டு யானைகள் மல்லானூர் பகுதிக்கு வந்து சுற்றி திரிந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள பருத்திக்கொல்லி என்ற கிராமத்திலிருந்து தேவேந்திரன் மனைவி உஷா (வயது 42) என்பவரும் மற்ற நபர்களும் வேலைக்கு செல்வதற்காக மல்லானூர் ெரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இவர்களை யானை வழிமறித்து தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த உஷா, சிவலிங்கம் (70) ஆகிய இருவரையும் மிதித்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தமிழக -ஆந்திர எல்லை பகுதியில் வாணியம்பாடி காவல் சரகத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லை பகுதியான மல்லானூர் பகுதியில் உள்ள தொட்டிகிணறு, தகரகுப்பம் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிக்கும் போலீசார் நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு யானைகள் நடமாட்டம் குறித்து தெரிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் நாட்டறம்பள்ளி போலீசார் மல்லானூர் எல்லைப் பகுதியில் உள்ள கொத்தூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தினர்.

காட்டுப் பகுதியில் இந்த யானைகள் ஏற்கனவே கிருஷ்ணகிரியில் பெருமாள் என்பவர் உட்பட நான்கு பேரை மிதித்து கொன்றுள்ளது. தற்போது தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் இருவரை மதித்துக் கொன்றுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story