முதியவர் உள்பட 2 பேர் காயம்
கார்கள் மோதி முதியவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66). இவருக்கு சொந்தமான தோட்டம், வடமதுரை அருகே உள்ள டி.என்.பாறைப்பட்டியில் உள்ளது. நேற்று காலை இவர், ஒரு காரில் தனது தோட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் கோவிந்தாபுரம் நோக்கி சென்றார்.
சென்னை பல்லாவரம் சத்யா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர் தனது மனைவி திவ்யா மற்றும் உறவினர்கள் பழனி, துர்கா, ஜோஸ்னா ஸ்ரீ ஆகியோருடன் ஒரு காரில் கேரளா மாநிலம் மூணாருக்கு சுற்றுலா சென்றார். காரை கார்த்திகேயன் ஓட்டினார்.
திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் தாமரைப்பாடி பஸ் நிறுத்தம் அருகே 2 கார்களும் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென 2 கார்களும் பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் ராமசாமி சென்ற கார் சாலையோரம் கவிழ்ந்தது. மேலும் ராமசாமி, கார்த்திகேயன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கார்த்திகேயனுடன் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.