மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி
பழனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
மரத்தில் கார் மோதல்
பழனி கவுண்டன்குளத்தை சேர்ந்தவர் குணசுந்தர் (வயது 55). கார் டிரைவர். இவர், தனது மனைவி சண்முகப்பிரியா (46), மகன்கள் ரஞ்சித்குமார் (21), தர்மேஸ்குமார் (18) மற்றும் உறவினரான இந்திரா நகரை சேர்ந்த நிர்மலா (70) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் திருச்சி பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து பழனிக்கு புறப்பட்டனர். காரை குணசுந்தர் ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு பழனியை அடுத்த கணக்கன்பட்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய குணசுந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் பயணம் செய்த நிர்மலா, சண்முகப்பிரியா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
விபத்து குறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் குணசுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
இதில் நிர்மலா, மேல்சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சண்முகப்பிரியா, அவரது 2 மகன்கள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.