மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் பலி அயோத்தியாப்பட்டணம் அருகே பரிதாபம்
மாேட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
அயோத்தியாப்பட்டணம்
விவசாயி பலி
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த அக்ரஹாரநாட்டாமங்கலம் அருகே ஏரி புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (வயது 40). இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து ஏரிபுதூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அக்ரஹாரநாட்டாமங்கலம் அருகே ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சீனிவாசன் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்னொருவர் சாவு
போலீசார் விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அந்த நபரும் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர், சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பெரியசாமி (40) என்ற செங்கல் சூளை தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர், சர்க்கார் நாட்டாமங்கலத்தில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த போது விபத்து நடந்துள்ளது. விபத்தில் பலியான இருவரது உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.