கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய தந்தை உள்பட 2 பேர் கைது
திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்ற விவகாரத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய தந்தை உள்பட 2 பேரை ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.
திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்ற விவகாரத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய தந்தை உள்பட 2 பேரை ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.
சாலையோரம் கிடந்த ஆண் குழந்தை
திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகில் உள்ள ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகில் கடந்த 5-ந் தேதி சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண் குழந்தை கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த ஆண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ேபாலீசார் விசாரணை
இது தொடர்பாக போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த குழந்தையை வீசிச்சென்றவர் முக்கொம்பு அருகில் உள்ள எலமனூர் அண்ணாநகரை சேர்ந்த செல்வமணியின் மகள் கலைவாணி(வயது 19) என்பதும், இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும், திருமணமாகாத நிலையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி கலைவாணி, வயலுக்கு அடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்ததாக கூறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தந்தை-அத்தை கைது
அங்கு கடந்த ஒரு வார காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை கலைவாணி பரிதாபமாக இறந்தார்.
திருமணத்திற்கு முன்பே, மாணவி கலைவாணி குழந்தை பெற்றதால் அவரை அவரது தந்தை மற்றும் அத்தை திட்டியதாகவும், அதனால் அவர் விஷம் குடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தந்தை செல்வமணி, அவரது அத்தை மல்லிகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.