முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து


முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அரசு ஊழியர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். .

நாகப்பட்டினம்

நாகையில் முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அரசு ஊழியர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். .

வக்கீல்

நாகை வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் போலீஸ் பன்னீர். இவர் முன்னாள் தி.மு.க நகர செயலாளர். இவருடைய மகன் தயாளன் (வயது 28). வக்கீல். வெளிப்பாளையம் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் (31). இவர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். உறவினர்களான இருவருக்கும், இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தயாளன், தனது நண்பரான நாகையை சேர்ந்த சங்கரலிங்கத்துடன் அவரது வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் கண்ணன் (31) ஆகியோர் சொத்து பிரச்சினை தொடர்பாக தயாளனிடம் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கத்திக்குத்து

அப்போது சரவணன் தான், மறைத்து வைத்திருந்த கத்தியால் தயாளனை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க முயன்ற தயாளனின் நண்பர் சங்கரலிங்கத்திற்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதில் தோள்பட்டை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தயாளன், சங்கரலிங்கம் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர் நண்பருடன் கைது

இதுகுறித்து தயாளன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story