பெண் உள்பட 2 பேர் தற்கொலை
பெரியகுளம் பகுதியில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி. அவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 50). கடந்த சில ஆண்டுகளாக இவர், சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வலி அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை அரைத்து குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெரியகுளம் வடகரையை சேர்ந்த தொழிலாளி அருண்குமார் (30) என்பவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.