காட்டெருமை தாக்கி 2 பேர் படுகாயம்
நத்தம் அருகே காட்டெருமை தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நத்தம் அருகே உள்ள முளையூரை சேர்ந்தவர் பெரிய கருப்பன் (வயது 48). அதே ஊரை சேர்ந்தவர் குமார் (32). விவசாயிகளான இவர்கள் 2 பேரும், நத்தம் சென்று விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். நத்தம் அருகே நரசிம்மபுரம் என்னுமிடத்தில் வந்தனர். அப்போது சாலையின் குறுக்கே பாய்ந்த காட்டெருமை ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 2 பேரையும் காட்டெருமை தாக்கியது.
இதனையடுத்து படுகாயம் அடைந்த கருப்பன், குமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.