சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சந்தானம்(வயது 67). இவர் செம்மடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் பணி முடிந்து தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது தோட்டக்குறிச்சி சமுதாயக்கூடம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் நடந்து சென்று கொண்டிருந்த குளித்தலை அருகே வளையப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (57) என்பவர் மீது நிலை தடுமாறி சந்தானம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சந்தானம் மோட்டார் சைக்கிளுடன் தார்சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் சுப்பிரமணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சுப்பிரமணியை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், சந்தானத்தை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.