செஞ்சி அருகேதம்பதியை தாக்கிய 2 பேருக்கு சிறை
செஞ்சி அருகே தம்பதியை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
செஞ்சி தாலுகா பாடிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 74). இவருக்கும் நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 8.2.2014 அன்று ஏழுமலை, இருசக்கர வாகன விபத்தில் சிக்கியபோது அவர் வைத்திருந்த செல்போன், ஆதார் அட்டை, உழவர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை ராமநாதன் என்பவர் எடுத்து சிவலிங்கத்திடம் கொடுத்துள்ளார்.
இதையறிந்த ரங்கநாதன் மகன் பூபாலன் (39) என்பவர் சிவலிங்கத்திடம் சென்று தனது சித்தப்பா ஏழுமலையின் பொருட்களை தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் 11.2.2014 அன்று இரவு சிவலிங்கம் தனது மனைவி சீதாலட்சுமியுடன் தனது வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பூபாலன், அவரது தம்பி கமலக்கண்ணன் (35) மற்றும் ஏழுமலை மகன் சரவணன் என்கிற குழந்தைவேலு (49) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஏழுமலையின் பொருட்களை கேட்டால் தர மாட்டாயா என்று கேட்டு சிவலிங்கத்தையும், அவரது மனைவி சீதாலட்சுமியையும் சாதி பெயரை சொல்லி திட்டி இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
2 பேருக்கு சிறை
இதுகுறித்து சிவலிங்கம், கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பூபாலன், கமலக்கண்ணன், சரவணன் ஆகிய 3 பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன், சரவணன் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், பூபாலனை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.