சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காண பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேர் தேர்வு


சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காண பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேர் தேர்வு
x

சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காண பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

செஸ் போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் ஜூலை மாதம் 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளிடையே 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட செஸ் வீரர்-வீராங்கனைகள் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் செஸ் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர்-வீராங்கனைகள் என 2 பேர் தேர்வு செய்யப்பட்டு மாமல்லபுரத்திற்கு ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை நேரடியாக காண்பதற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

2 பேர் தேர்வு

இதற்கான தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தால், பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று வரை நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 வயதிற்குட்பட்ட 86 பள்ளி மாணவர்களும், 36 பள்ளி மாணவிகளும் என மொத்தம் 122 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று செஸ் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்தம் 9 சுற்றுகளில், மீதமுள்ள 4 சுற்றுகள் லீக் முறையில் நேற்று மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது.

நடுவர்களாக சங்கரராமன், சண்முகம் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதல் இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துள்ள சங்குபேட்டையை சேர்ந்த விஷ்வஜூத் (வயது 15) என்பவரும், மாணவிகள் பிரிவில் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ரெங்கா நகரை சேர்ந்த இந்துமதி (13) என்பவரும் பிடித்து சாதனை படைத்தனர்.

பரிசளிப்பு விழா

பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதல் 25 இடங்களை பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு ஒலிம்பியாட், தமிழ்நாடு அரசு ஏ.ஐ.சி.எப். சின்னங்கள் பொறிக்கப்பட்ட பரிசு கோப்பைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த வீரர்-வீராங்கனைகள் பெரம்பலூர் மாவட்ட சாம்பியன் என்ற பெருமையுடன் தமிழ்நாடு அரசின் விருந்தினராக மாமல்லபுரத்தில் 3 நாட்கள் தங்கி 5 நட்சத்திர விடுதியில் நடைபெறும் சர்வதேச தரத்திலான ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காணவுள்ளனர்.

போட்டிற்கான ஏற்பாடுகளை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சரவணன், செயலாளர் அலெக்ஸ்சாண்டர், பொருளாளர் அழகுதுரை, இணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story