கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை:சிதம்பரம் கோர்ட்டில் 2 பேர் சரண்


கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை:சிதம்பரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
x

கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கடலூர்

கொடூர கொலை

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48). மீனவர். இவருடைய மனைவி சாந்தி. இவர் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவத்திற்கு பிறகு கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம்பிள்ளை தெருவில் குடும்பத்தோடு வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மதியழகன் அங்குள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த போது, மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்தது. அவரது முகத்தை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்து விட்டு தப்பிச்சென்றது.

11 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி ஊராட்சி மன்ற தலைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் மாசிலாமணி, பிரகலாதன், தினேஷ், விஜய், சரவணன், மணிகண்டன் உள்பட 24 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

அப்போது, கடலூர்-விழுப்புரம் மாவட்ட எல்லை வழியாக தப்பிச்செல்ல முயன்ற தாழங்குடாவை சேர்ந்த தினேஷ் (வயது 24), விஜய் (24), குருநாதன் (40), மணிகண்டன் (32), சரவணன் (47), அர்ஜூனன் (29), ராஜவேல் (38), ராஜேந்திரன் (23), அந்தோணி செல்வம் (41), ஆகாஷ் (23), வச்சலா (45) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 பேர் சரண்

அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணனை கொலை செய்ததற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக, மாசிலாமணி உள்பட 24 பேர் சேர்ந்து மதியழகனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைதான 11 பேரையும் கடலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீசார் தங்களை தேடுவதாக கூறி முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாசிலாமணி, பிரகலாதன் ஆகிய 2 பேரும் சிதம்பரம் சி.முட்லூரில் உள்ள 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சக்திவேல் முன்பு சரண் அடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல் தகனம்

இதற்கிடையில் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மதியம் 1.50 மணி அளவில் மதியழகன் உடல், அவரது சொந்த ஊரான தாழங்குடாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலி முடிந்ததும், மாலை 5.30 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இதையொட்டி பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கைதான பெண் சிக்கியது எப்படி?

கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் கைதான பெண் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மதியழகன் (வயது 48) வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். மாசிலாமணி உள்பட 2 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்நிலையில் கைதான 11 பேரில் பிரகாஷ் மனைவி வச்சலாவும்(45) ஒருவர். இந்த வழக்கில் 24 பேரில் இவர் தான் பெண். இவர் கைதான விவரம் குறித்து போலீசார் கூறுகையில், வச்சலா சண்முகம்பிள்ளை தெருவில் மீன் வியாபாரம் செய்து வந்தார். அவர் தான் மதியழகனின் நடமாட்டம் குறித்து மாசிலாமணி தரப்பினரிடம் அவ்வப்போது கூறி வந்துள்ளார். கொலை நடந்த அன்று கூட வச்சலாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு தான், மதியழகனை அவர்கள் துரத்தி சென்று வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் தாழங்குடா கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.(


Next Story