விவசாயியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
வாணியம்பாடி அருகே விவசாயியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது நிலத்தில் விளைந்த காய்களை வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றார். அதே கிராமத்தை சேர்ந்த மேலும் 2 விவசாயிகள் பின்னால் சென்றுகொண்டிருந்தனர். நேதாஜிநகரை அடுத்த ஜல்லிமிஷின் என்ற இடத்தில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் ரமேஷை வழிமறித்து கட்டைகளால் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த விவசாயி ரமேஷ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த சக விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா, ஏட்டுக்கள் முரளி, குமரவேல் மற்றும் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை துரத்திச் சென்று பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 26), செந்தில் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.