சாலை விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்ற 2 பேர் லாரி மோதி பலி
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்க சென்றபோது லாரிமோதி 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்க சென்றபோது லாரிமோதி 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான ஆட்டோ
வேலூரை அடுத்த பொய்கை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சீனிவாசபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது ஆட்டோ நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயத்துடன் வினோத்குமார் உயிர்தப்பினார்.
அப்போது அந்த வழியாக வேலூர் காட்பாடியை அடுத்த மேல்மாயில் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன்கள் சரவணன் (36), சுந்தரமூர்த்தி (32) ஆகியோர் காட்பாடியிலிருந்து ஓசூர் நோக்கி லாரியில் கோழித் தீவனம் ஏற்றி சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கிய வினோத்குமாரை மீட்க தங்களது லாரியை சாலையோரமாக நிறுத்தினர்.
லாரிமோதி 2 பேர் பலி
அப்போது அந்த வழியாக மற்றொரு லாரியில் வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடவரத்தை சேர்ந்த ராஜா (26), தவகிருஷ்ணன் (24) ஆகியோரும் தங்கள் லாரியை நிறுத்தி விட்டு வினோத்குமாருக்கு உதவ சென்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (36) என்பவரும் உதவி செய்ய வந்தார்.
வினோத் குமாரை மீட்க இவர்கள் 5 பேரும் உதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இரும்பு லோடு ஏற்றிய லாரி கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் 5 பேர் மீதும் மோதியது. இதில் ராஜா, சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விபத்தில் சிக்கிய வினோத்குமார் மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தவகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, சீனிவாசன் ஆகிய 3 பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த வினோத்குமாருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜா, சரவணன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவருக்கு உதவ முயன்ற போது லாரி மோதி 2 பேர் இறந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.