நூதன முறையில் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது


திருப்பூர்


ஜூலை.27-

குடிமங்கலம் அருகே பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நூதனமுறையில் பெட்ரோல் திருட்டு

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தையடுத்த பெதப்பம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடுவதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து காருக்கு பெட்ரோல் நிரப்பும் போது அந்த ஆண் வாகன டிரைவரிடம் பேச்சுக்கொடுத்து கவனத்தை திசை திருப்ப, அந்த பெண் பின்னால் உள்ள பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை திருடுகிறார்.

இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெண்ணிலா குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அந்த பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்த கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச்சேர்ந்த சிலம்பரசன் (வயது 23), சூப்பர்வைசராக வேலை பார்த்த சீலக்காம்பட்டியைச் சேர்ந்த சாந்தி (38) என்பது தெரிய வந்துள்ளது.

2 பேர் கைது

பெட்ரோல் திருடும் வீடியோ வைரலாக பரவிய நிலையில் பெட்ரோல் பங்குக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலம்பரசனிடம் அது குறித்து கேட்டுள்ளனர். உடனடியாக பணப்பை மற்றும் சாவியை சாந்தியிடம் கொடுத்து விட்டு ஊழியர்களின் விவரம் மற்றும் சம்பளப்பட்டியலை எடுத்துக் கொண்டு சிலம்பரசன் அங்கிருந்து சென்று விட்டார்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெண்ணிலா மாலை வந்து கணக்கு பார்த்தபோது பெட்ரோல் விற்பனை செய்த பணத்தில் ரூ.8ஆயிரத்து 800 குறைவாக இருந்துள்ளது. இதுகுறித்து வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குடிமங்கலம் போலீசார் சிலம்பரசன் மற்றும் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story