ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது


ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x

ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்

குடிமங்கலம்

உடுமலை அருகே மூதாட்டியிடம் கவரிங் நகையை பறித்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை பறிப்பு

உடுமலையையடுத்த கணக்கம்பாளையம் தாண்டாகவுண்டன்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 65). இவர் கடந்த 10-ந் தேதி குடிமங்கலத்தையடுத்த பொன்னேரி அய்யம்பாளையம்புதூர் பகுதியிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அய்யம்பாளையம் புதூர் பிரிவில் பஸ்சில் இருந்து இறங்கி மகள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் பாண்டியம்மாள் கழுத்திலிருந்த செயினை அறுத்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து பாண்டியம்மாள் தனது கழுத்திலிருந்த 2 பவுன் கவரிங் நகையை பறித்துச் சென்றதாக குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து செயின் பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம், ஏட்டுகள் லிங்கேஸ்வரன், முத்து மாணிக்கம், போலீசார் நல்ல பெருமாள், பாரதிராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான ஆசாமிகளின் உருவப்படத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.இதனைத்தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம் கோட்டூர் தென்சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற ஜெகதீஷ் (வயது 28) மற்றும் கோட்டூர் பஸ் நிறுத்தம் இறக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற காட்டுப்பூச்சி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகையையும் கைப்பற்றினர். அப்போது அந்த நகை கவரிங் என்பது தெரிய வந்ததது. இதில் சூர்யா உடுமலை பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணி புரிந்து வந்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் சிவகங்கை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலே திருடர்கள் கவரிங் நகை என்று தெரியாமல் திருடி மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story