தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
முத்தையாபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:
முத்தையாபுரம் அருேகயுள்ள முள்ளக்காடு சவேரியார்புரத்தை சேர்ந்தவர் மங்கள பாண்டி. இவரது மகன் தங்கதுரை (வயது29). சென்ட்ரிங் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் முள்ளக்காடு ராஜிவ்நகர் மெயின் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது, கணேஷ் நகர் 1-வது தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன், ராஜீவ் நகரை சேர்ந்த குழந்தைவேல் மகன் முத்துக்குமார் (19) ஆகிய இருவரும் அந்த வழியாக வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். இதனைப் பார்த்த தங்கதுரை அவர்களை பிடித்து செல்போனை அவர்களிடமிருந்து மீட்டு வட மாநிலத்தவரிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிறிது நேரத்தில் கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து தங்கத்துரையை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த தங்கதுரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அன்று இரவு அந்தப் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரெட்ரிக் என்பவரின் காரின் கண்ணாடியை 5 பேரும் சேர்ந்து உடைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்தார். நேற்று இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக முத்துக்குமார் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.