போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 8 வாலிபர்களிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 8 வாலிபர்களிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலை
திருச்சி ஸ்ரீரங்கம் காந்திரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி செயல்பட்டு வருகிறது. இங்கு போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 5 பட்டதாரி வாலிபர்கள் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் என 8 பேரிடம் கடந்த 10-ந் தேதி ரூ.18 லட்சம் பெற்று கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கூறி ஸ்ரீரங்கம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் கன்சல்டன்சி உரிமையாளர் மீனாட்சி (வயது 28), மேலாளர் பாலகிருஷ்ணன் (32) ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கன்சல்டன்சி நடத்தி வந்ததும், இதுவரை சுமார் 250 பேரை போலந்து, ருமேனியா, செர்பியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்தது.
போலி பணி நியமன ஆணை
மேலும், இவர்கள் டெல்லியில் உள்ள ரீகன் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் மூலம் ஆட்களை வேலைக்கு அனுப்பி வருவதும், இவர்களுக்கு சென்னை, மும்பை, மதுரை ஆகிய இடங்களில் சப்-ஏஜெண்டுகள் இருப்பதும் தெரியவந்தது. போலந்து மற்றும் ருமேனியா நாடுகளில் உள்ள நிறுவனத்தின் மூலம் போலி பணி நியமன ஆணை பெற்று வருவதும், தற்சமயம் 60 முதல் 70 பேர் வரை இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை மலேசியாவில் உள்ள போலந்து நாட்டின் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. இவர்கள் வேலை கேட்டு வரும் நபர்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை பெற்று கொண்டும், கமிஷன் தொகையாக ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை எடுத்து கொண்டும், விமான கட்டணத்துக்கும், விசா பெறுவதற்கும் செலவு செய்தது போக மீதமுள்ள தொகையையும் இவர்களே வைத்து கொள்வதும் தெரியவந்தது.
பெண் உள்பட 2 பேர் கைது
இதையடுத்து தனியார் கன்சல்டன்சி உரிமையாளர் மீனாட்சி, மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிந்த போலீசார் 48 மணி நேரத்துக்குள் அவர்களை கைது செய்தனர். மேலும், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடி நபர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.