ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ரூ.10 லட்சம் வழிப்பறி வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து   போலீசார் விசாரணை
x

குலசேகரன்பட்டினத்தில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் பறித்து சென்ற வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் பறித்து சென்ற வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன அதிகாரி

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (வயது 40). இவர், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு தனியார் இரும்பு விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் இருந்து பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதேபோன்று உடன்குடியைச் சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான உருக்காலைக்கு இரும்பு அனுப்பியதற்காக பணம் வாங்குவதற்கு நிறுவனத்துக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் அவர் வந்துள்ளார். சம்பவத்தன்று உடன்குடியில் அந்த உருக்காலைக்கு சொந்தமான கடைக்கு சென்று ரூ.10 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

ரூ.10 லட்சம் வழிப்பறி

அங்கிருந்து ரூ.10 லட்சத்துடன் தூத்துக்குடியில் உள்ள நிறுவனத்துக்கு மீண்டும் லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். டிரைவர் சின்னத்துரை என்பவர் ஆட்டோவை ஓட்டினார்.

உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் தருவைகுளம் இசக்கியம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், செந்தில்குமாரிடம் வந்து லோடு ஆட்டோவை ஒழுங்காக ஓட்டிச் செல்லுமாறு கூறி பிரச்சினை செய்தனர். வாய்த்தகராறு முற்றியதில் லோடு ஆட்டோவை மறித்து நிறுத்தி தகராறு செய்தனர்.

இதனால் செந்தில்குமாரும், சின்னத்துரையும் லோடு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினர். அப்போது திடீரென மர்மநபர்கள், அவர்களை கீழே தள்ளிவிட்டு லோடு ஆட்டோவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றனர்.

2 பேரை பிடித்து விசாரணை

இதுகுறித்து செந்தில்குமார் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவர் சின்னத்துரை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியபோது, சின்னத்துரை தனது உறவினர்களுடன் சேர்ந்து நாடகமாடி ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சின்னத்துரை மற்றும் அவரது உறவினரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.


Next Story