தேனி என்ஜினீயர் உள்பட 2 பேர்ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.18 லட்சம் மீட்பு:சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


தேனி என்ஜினீயர் உள்பட 2 பேர்ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.18 லட்சம் மீட்பு:சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:46 PM GMT)

தேனி என்ஜினீயர் உள்பட 2 பேர் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.18 லட்சத்தை தேனி சைபர் கிரைம் போலீசார் முழுமையாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தேனி

என்ஜினீயர்

தேனியை அடுத்த அரண்மனைப்புதூரை சேர்ந்த முருகேந்திரன் மகன் செல்வக்குமார் (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பயன்படுத்தி வரும் டெலிகிராம் செயலியில் அவருக்கு, வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடர்பான ஒரு குறுஞ்செய்தி வந்தது.

குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்ட நபர், பிரபல ஓட்டல்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்வதன் மூலம் கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். அதற்கு அவர் கூறும் இணையதள முகவரிக்கு சென்று, புதிதாக ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும் என்றார். அதன்படி, செல்வக்குமார் புதிதாக பயனர் கணக்கு தொடங்கினார். அதன் மூலம், முன்பதிவு செய்து வந்தார். அந்த வகையில் அவருக்கு கொஞ்சம், கொஞ்சமாக கமிஷன் தொகை வந்தது.

ரூ.13¼ லட்சம்

அதன்பிறகு பணம் கட்டி இதுபோன்ற பணிகளை செய்யும் போது கமிஷன் தொகையுடன் அதிக லாபமும் கிடைக்கும் என்று ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆசை வார்த்தைகள் கூறினர். அதை நம்பிய அவர் பணம் செலுத்தி பணிகளை மேற்கொண்டார். அவர் செலுத்தும் பணம் அதற்கான கமிஷன் தொகை எல்லாம் அவர் தொடங்கிய பயனர் கணக்கில் காட்டியது. இதனால், அவர் மீண்டும் மீண்டும் பல தவணைகளில் பணம் செலுத்தினார்.

மொத்தம் ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 490 செலுத்திய நிலையில், அவருடைய கணக்கில் ரூ.38 லட்சம் காட்டியது. ஆனால், அதை எடுக்க முடியவில்லை. மேலும் பணம் செலுத்துமாறு கூறியதால் சந்தேகம் அடைந்த செல்வக்குமார் இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பணம் மீட்பு

இந்நிலையில், தேனியை சேர்ந்த 26 வயது பெண்ணும், இதேபோன்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 836 இழந்தார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரிலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். மோசடி செய்த பணம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இரு சம்பவங்கள் தொடர்பாகவும், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பின்னர், 2 பேர் இழந்த பணத்தையும் முழுமையாக போலீசார் மீட்டு உரியவர்களிடம் கொடுத்தனர்.

மீட்கப்பட்ட பணம் மற்றும் அதற்குரிய வங்கி கணக்கு விவரங்களை செல்வக்குமார் உள்பட 2 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று ஒப்படைத்தார்.


Related Tags :
Next Story