கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை


கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை
x

முதியவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விபத்து வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

முதியவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விபத்து வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்விரோதத்தில் தாக்குதல்

லால்குடியை சேர்ந்தவர் தர்மர் (வயது 62). இவருடைய மனைவி மனோன்மணி. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்து பிரச்சினை தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த வினோத் மனைவி ஆரோக்கியசெல்விக்கும், தர்மர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தர்மர் 2017-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்தபோது, அங்கு வந்த வினோத் கட்டையால் தர்மரை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து மறுநாள் அரசு மருத்துவமனைக்கு சென்ற வினோத், மருதை ஆகியோர் தர்மரை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது கை விரல்கள் துண்டானது. இதையடுத்து அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தலா 7 ஆண்டுகள் சிறை

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மனோன்மணி லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், வினோத், மருதை, இசக்கியேல், ஆரோக்கியசெல்வி, லீமாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் ஹேமந்த் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட வினோத், மருதை ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார். மற்ற 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆட்டோ மோதியது

இதே போல் திருச்சி நாகமங்கலம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி லூர்துமேரி (55). இவருடைய மகன் ஆரோக்கியசகாயராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தனது தாயார் லூர்துமேரியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி மன்னார்புரம்-கே.கே.நகர் ரோட்டில் மதுரை பிரிவு ரோடு ஜங்ஷன் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் லூர்துமேரியும், அவரது மகன் ஆரோக்கிய சகாயராஜும் கீழே விழுந்தனர். இதில் ஆரோக்கியசகாயராஜ் லேசான காயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்த லூர்துமேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சில தினங்களில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கடேசை கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், வெங்கடேசுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து இருந்தார்.


Related Tags :
Next Story