குலசேகரன்பட்டினம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்த 2 பேர் கைது


குலசேகரன்பட்டினம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் வைத்து சிறுவர்களுக்கு விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள் விற்பனை

திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில ்ஈடுபட்டிருந்தனர். குலசேகரன்பட்டினம் அருகே வேதகோட்டைவிளை ஞானியார்குடியிருப்பு ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே காரில் வைத்து புகையிலை பொருட்களை சிறுவர்களுக்கு 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், கொட்டன்காடு முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வைகுண்டபாலன் (வயது 22), வேதகோட்டைவிளை இளையபெருமாள் மகன் சங்கர் (39) ஆகியோர் என்பதும், தொடர்ந்து அந்த பகுதியில் காரில் வைத்து சிறுவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 36 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இவர்கள் எங்கிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்கிறார்கள்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story