கொட்டாம்பட்டி அருகே போலீஸ் போல் நடித்து ஜவுளி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி-மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேருக்கு வலைவீச்சு


கொட்டாம்பட்டி அருகே போலீஸ் போல் நடித்து ஜவுளி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி-மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேருக்கு வலைவீச்சு
x

கொட்டாம்பட்டி அருகே காரில் சென்ற ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி செய்தனர். வழிப்பறி செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே காரில் சென்ற ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி செய்தனர். வழிப்பறி செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாகன சோதனை

மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்தவர் ஷேக்தாவூத்(வயது 55). டெக்ஸ்டைல் தொழில் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி யூசுப்சுலைகாவுடன் காரில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் டிராவல்ஸ் நடத்தும் உறவினர் ஒருவரிடம் ரூ.50 லட்சத்தை கொடுக்க காரில் சென்றனர். காரை டிரைவர் சித்திக் ஓட்டினார்.

இந்த கார் கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனை விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் போல் சீருடை அணிந்து இருந்த 2 பேர் முன்னால் சென்ற வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஷேக்தாவூத் வந்த காரை சாலையோரம் நிறுத்துமாறு கூறினர்.

ரூ.50 லட்சத்துடன் மாயம்

போலீசார் தானே சோதனை செய்கிறார்கள் என கருதி காரை சாலையோரம் நிறுத்தினர். காரை சோதனை செய்தபோது போலீசார், அவரது மனைவி கைப்பையில் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை பார்த்து விசாரித்தனர். மேலும் அதற்கான ஆவணத்தை கேட்டனர். ஆனால் ஆவணம் இல்லை என தெரிவித்ததும், அந்த பணத்தை வாங்கி வைத்து கொண்டனர். ஆவணத்தை காண்பித்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக்தாவூத் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அய்யாபட்டி விலக்கு பாலம் அருகே சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென எதிர் திசைக்கு சென்று மேலூர் நோக்கி வேகமாக சென்று மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக்தாவூத் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

போலீசில் புகார்

இதனையடுத்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தனர்.

மேலும் அவரது உத்தரவின் பேரில் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பறிபோன ரூ.50 லட்சம் ஹவாலா பணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் போல நடித்து ரூ.50 லட்சத்தை வழிப்பறி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story