அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள் சிக்கின


அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள் சிக்கின
x

வங்கி கடனை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தொழில் அதிபர் வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள், 12 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னை அண்ணா நகர், ஈ பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சஞ்சய் குப்தா (வயது 40). இவருடைய மனைவி வினிதா குப்தா (38). தொழில் அதிபர்களான இவர்கள், அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.53 லட்சம் கடன் வாங்கினர்.

ஆனால் அதற்கான தவணையை திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி அதிகாரிகள், சஞ்சய் குப்தா வீட்டை பூட்டி 'சீல்' வைத்து விட்டு சென்றனர். இந்தநிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்காக வங்கி அதிகாரிகள் நேற்று மாலை 'சீல்' வைக்கப்பட்ட சஞ்சய் குப்தா வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று சோதனை செய்தனர்.

கைத்துப்பாக்கிகள்-தோட்டா

அப்போது வீட்டின் படுக்கை அறையில் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் இருப்பதை கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் இருந்த 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இவற்றுக்கு உரிமம் வாங்கி வைத்து இருந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் நாச வேலைக்காக வாங்கி வைத்து இருந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தம்பதிகளுக்கு வலைவீச்சு

தற்போது தம்பதிகளான சஞ்சய்குப்தா-வினிதா குப்தா இருவரும் எங்கு இருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர்களிடம் விசாரித்தால்தான் வீட்டில் எதற்காக 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் வைத்து இருந்தனர்? அதற்கு உரிமம் உள்ளதா? எங்கிருந்து வாங்கினார்கள்? எதற்காக வைத்திருந்தார்கள்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story