தற்கொலை செய்த போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்


தற்கொலை செய்த போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்
x

தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

ராமநாதபுரம்

தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

போலீஸ்காரரின் செல்போன்

ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர், அசோக்குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரிடம், அசோக்குமார் தற்கொலை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விவரங்களை கேட்டனர். அப்போது அசோக்குமாரின் செல்போன் மட்டும் மாயமானது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்குமாரின் செல்போனை ஒருவர் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது, ஒரு கடையில் அந்த போனை வாங்கியதாக தெரிவித்தார். அந்த கடையில் விசாரித்தபோது, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் இருவர் ரூ.2 ஆயிரத்திற்கு அசோக்குமாரின் செல்போனை விற்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கடந்த 3 நாட்களாக விசாரணை மேற்கொண்டார்.

பணியிடை நீக்கம்

விசாரணையின் முடிவில் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணன் ஆகியோர் செல்போன் திருடி விற்றது தெரியவந்ததால் வழக்குப்பதிவு செய்யவும், இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை போலீசாரே திருடி விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் தகராறு ஒன்றில் கைப்பற்றப்பட்ட நகைகளை எடுத்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story