2 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


2 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்  திரண்டதால் பரபரப்பு
x

காஞ்சனகிரி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஒரே நேரத்தில் 2 கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராணிப்பேட்டை

கோவிலை நிர்வகிப்பத்தில் பிரச்சினை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா லாலாப்பேட்டை அருகே முகுந்தராயபுரம் ஊராட்சி எல்லையில் உள்ள காஞ்சனகிரி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக முகுந்தராயபுரம் ஊராட்சி, லாலாப்பேட்டை ஊராட்சி நிர்வாகிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிலை முகுந்தராயபுரம் ஊராட்சி நிர்வாகிகள் நிர்வகிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் லாலாப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் முன்பு திரண்டனர். அதேபோல் முகுந்தராயபுரம் ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர்.

பரபரப்பு

ஒரே சமயத்தில் இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் வருவாய் கோட்டாட்சியர் வினோத், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ஊர்வலமாக செல்வதற்கு காத்திருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் முகுந்தராயபுரம் ஊராட்சி, லாலாபேட்டை ஊராட்சி பொதுமக்கள் சமாதான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தி கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.


Next Story