ஈரோட்டில் 2 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை- ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது
ஈரோட்டில் 2 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. அனைத்து தக்காளிகளும் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
ஈரோட்டில் 2 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. அனைத்து தக்காளிகளும் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
மலிவு விலையில் தக்காளி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை ஆனது. இதனால் தக்காளி விலையை கட்டுப்படுத்த மாநில அரசு, தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து உழவர் சந்தைகளில் மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தை, சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் மட்டும் ஓரிரு நாட்கள் தக்காளி விற்பனையை தோட்டக்கலை துறை செயல்படுத்தியது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தினமும் மலிவு விலை தக்காளி வழங்க இயலாமல் போனது.
ரேஷன் கடைகளில்...
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் கூட்டுறவு மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு அறிவித்தது. ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, ஒரு கிலோ தக்காளி என டோக்கன் வழங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 15 கூட்டுறவு ரேஷன் கடைகளில் மட்டும் தக்காளி விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஈரோடு மாவட்டம் தாளவாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் உட்பட சில இடங்களில் மொத்தமாக தக்காளியை கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தக்காளி கிடைக்கவில்லை.
85 கிலோ
இதனால் நேற்று, ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள 2 ரேஷன் கடைகளில் மட்டும் ஒரு கிலோ தக்காளி ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 85 கிலோ மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரியாததால் பெரும்பாலானோர் வரவில்லை.
ரேஷன் கடை பணியாளர்கள் தக்காளி வாங்க வந்தவர்களிடம் அவர்களுடைய ரேஷன் கார்டு எண் மற்றும் கையெழுத்து வாங்கிக்கொண்டு தக்காளி விற்பனை செய்தனர். ஒரு மணி நேரத்தில் 2 ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்று தீர்ந்தது. ஒரு சிலர் தக்காளி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
தெளிவுப்படுத்த வேண்டும்
குறிப்பிட்ட 15 ரேஷன் கடையிலும் தக்காளி விற்பனை செய்ய ஒசூர், தாளவாடி போன்ற இடங்களில் உள்ள தக்காளி விவசாயிகளை அணுகியபோது, அவர்கள் வழக்கமாக வழங்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்குவதாக கூறிவிட்டனர். இதனால், கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தக்காளி விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அந்தந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் ரேஷன் கார்டுதாரருக்கு மட்டுமே அங்கு தக்காளி வழங்கப்படுமா? அல்லது பிற கடையில் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் கிடைக்குமா? என்ற தெளிவான அறிவிப்பு இல்லாததால் கடைக்காரர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இதை மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஈரோடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.