நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த உறவினர்கள் 2 பேர் கைது
நாகையில், மூதாட்டி மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்கு ஆசைப்பட்டு அவரை அவரது உறவினர்கள் 2 பேர் கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாகையில், மூதாட்டி மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்கு ஆசைப்பட்டு அவரை அவரது உறவினர்கள் 2 பேர் கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தனியாக வசித்து வந்த மூதாட்டி
நாகை கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி சரோஜா(வயது 65). இவர்களுடைய மகன்கள் கோவிந்தராஜ், ராஜா ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகசுந்தரம் இறந்து விட்டதால், சரோஜா மட்டும் நாகை கீரைக்கொல்லை தெருவில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் சரோஜா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
மர்மமான முறையில் சாவு
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு சரோஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய காது மற்றும் வாய் பகுதியில் சிறிதளவு ரத்தம் கசிந்து இருந்தது. இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாகை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். சரோஜாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தங்கை வைர கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
மூதாட்டி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக விசாரிக்க நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மர்மச்சாவு வழக்கில் திடீர் திருப்பமாக சரோஜா நகைக்காக கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் போலீசாரின் விசாரணையின்போது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை உதயடிக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் காளிதாஸ்(24). இவருடைய அண்ணன் மனைவி வள்ளிமுத்து(27). சரோஜாவின் உறவினர்களான இவர்கள் இருவரும் கடந்த 14-ந் தேதி இரவு சரோஜா வீட்டில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு நல்ல முறையில் சரோஜா விருந்து உபசரிப்பு செய்துள்ளார்.
தலையணையால் அமுக்கி கொலை
இரவு சரோஜா, காளிதாஸ், வள்ளிமுத்து ஆகிய 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கினர். சரோஜா ஆழ்ந்து தூங்கிய பிறகு, காளிதாஸ், வள்ளிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து சரோஜாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்தனர். இதையடுத்து அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, கம்மல் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காளிதாஸ், வள்ளி முத்து ஆகிய இருவரும் வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே நிற்பதாக தகவல் கடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சரோஜாவின் நகைகள் மற்றும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டினார்.