தாடிக்கொம்பு அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி


தாடிக்கொம்பு அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Jan 2023 2:00 AM IST (Updated: 28 Jan 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு அருகே ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அருகே ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்த கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களது மகன் திருமுருகன் (வயது 11). அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

பன்றிமலை அடுத்த அழகு மடையை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் மனோஜ்குமார் (11). தாடிக்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் தாடிக்கொம்புவில் வசித்து வந்தனர். நாகஜோதியும், சரஸ்வதியும் அக்காள்-தங்கை. விடுமுறை நாட்களில் திருமுருகனும், மனோஜ்குமாரும் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.

நீரில் மூழ்கி சாவு

இந்தநிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மனோஜ்குமாரும், திருமுருகனும் சேர்ந்து கருங்கல்பட்டி அருகே குடகனாற்றில் குளிக்க சென்றனர். அங்கு தங்களது ஆடைகளை கரையில் கழற்றி வைத்தனர். பின்னர் இருவரும் ஆற்றில் குளித்தனர். அப்போது மாணவர்கள் நீரில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அங்கு குளிக்க வந்தவர்கள் மாணவர்களின் துணிமணிகள் கரையில் இருப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் சந்தேகம் அடைந்து, ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி பலியான திருமுருகன், மனோஜ்குமார் உடல்களை மீட்டனர். தகவலறிந்து அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story