போக்சோ கைதியை பிடிக்க 2 தனிப்படை


போக்சோ கைதியை பிடிக்க 2 தனிப்படை
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற போக்சோ கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற போக்சோ கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

போக்சோ கைதி

பூதப்பாண்டி அருகே உள்ள வீரவநல்லூரை சேர்ந்தவர் சிவகுமார் என்ற சுடலையாண்டி (வயது 56). இவர் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக் கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதான அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சிவகுமார் நேற்றுமுன்தினம் காலையில் பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். பாதுகாப்புக்காக பூதப்பாண்டி போலீஸ் நிலைய ஏட்டு பிரேம்குமார் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு ஜோஸ்லின் ஜெயராணி ஆகியோர் வந்தனர்.

தப்பி ஓட்டம்

பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நேற்று முன்தினம் மாலை சிவகுமாரை போலீசார் வடசேரி பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பஸ் ஏற காத்திருந்தனர். அப்போது சிவகுமார் கழிவறை செல்ல வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.

இதை நம்பிய போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே வடசேரி போலீசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தப்பி ஓடிய சிவகுமாரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

2 தனிப்படை அமைப்பு

இதைத் தொடர்ந்து சிவகுமார் தப்பிச் சென்றது குறித்து போலீஸ் ஏட்டு பிரேம்குமார் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். அதன்பேரில் சிவகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய போக்சோ கைதியான சிவகுமாரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடி வருகிறார்கள். முதற்கட்டமாக பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீஸ் பிடியில் இருந்து சிவகுமார் தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாக 2 போலீஸ் ஏட்டுகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story