கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி


கோவில்பட்டி அருகே குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளிக்கூட வகுப்பு தோழிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி நியூ காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 42), பெயிண்டர். இவருடைய மகள் வைஷ்ணவி (15). இவர், கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது (43). இவருைடய மகள்கள் ஷகிலா (15), ஜன்னத் அர்சியா (13). கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஷகிலா பிளஸ்-1 வகுப்பும், ஜன்னத் அர்சியா 7-ம் வகுப்பும் படித்தனர். வைஷ்ணவி, ஷகிலா ஆகிய 2 பேரும் பள்ளிக்கூட வகுப்பு தோழிகள் ஆவர்.

கிராமத்தைச் சுற்றி பார்க்க சென்றபோது...

பள்ளிக்கூட விடுமுறை நாளான நேற்று காலையில் ஷகிலா தன்னுடைய தங்கை ஜன்னத் அர்சியாவை அழைத்து கொண்டு, லிங்கம்பட்டியில் உள்ள தோழி வைஷ்ணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் மதியம் வைஷ்ணவியும், ஜன்னத் அர்சியாவும் கிராமத்தைச் சுற்றி பார்க்க சென்றனர். அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவர்களைத் தேடி வைஷ்ணவியின் குடும்பத்தினரும், ஷகிலாவும் சென்றனர்.

பயன்பாடற்ற கல்குவாரி

அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடற்ற கல்குவாரி குட்டை பகுதியில் வைஷ்ணவி, ஜன்னத் அர்சியா ஆகியோரது செருப்புகள் கிடந்தன. அந்த குட்டையில் பல அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவியின் குடும்பத்தினர், இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும், நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல்கள் மீட்பு

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கல்குவாரி குட்டை தண்ணீரில் இறங்கி மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு வைஷ்ணவி, ஜன்னத் அர்சியா ஆகியோரது உடல்களை மீட்டனர். அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவிகள் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உறவினர்கள் கதறல்

இறந்த மாணவிகளின் உடல்களைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story