கொளத்தூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்தபோது பரிதாபம்


கொளத்தூர் அருகே  காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி  விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்தபோது பரிதாபம்
x

கொளத்தூர் அருகே விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலியானார்கள்.

சேலம்

கொளத்தூர்,

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பள்ளி மாணவிகள்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குளியை சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள். இவரது மகன்கள் அறிவுசெல்வன், அன்புசெல்வன். இவர்கள் இருவரும் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

அறிவுசெல்வனின் மகள் சுசித்ரா (வயது 11). இவள் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இதேபோல் அன்பு செல்வனின் மகள் சசிரேகா (6). இவள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இதனிடையே பள்ளி விடுமுறையையொட்டி மாணவிகள் 2 பேரும் சேத்துக்குளியில் உள்ள பாட்டி பாப்பாத்தி அம்மாளின் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி பலி

இந்த நிலையில், நேற்று பாப்பாத்தி அம்மாள் தனது பேத்திகள் சுசித்ரா, சசிரேகா ஆகியோருடன் அங்குள்ள காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது மாணவிகள் ஆற்று தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தனர். பாப்பாத்தி அம்மாள் துணிகளை துவைத்து கொண்டு இருந்தார்.

அப்போது மாணவிகள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாப்பாத்தி அம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவிகளை மீட்க முயன்றனர். அதற்குள் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

சோகம்

இதுகுறித்த தகவலின் பேரில் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவிகளின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்ல இருந்த மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story