உளுந்தூர்பேட்டையில்லாரி மோதி 2 மாணவர்கள் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
கல்லூரி மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மாலிக் மகன் அஸ்வாக்(வயது 20). சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்து வந்தார்.
இதேபோல் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மகன் பஹிம்(20), சென்னை வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் ஒரு மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூருக்கு புறப்பட்டனர். பஹிம் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
2 பேர் பலி
இரவு 10.30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அஸ்வாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பஹிமை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பஹிம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.