கணக்கு பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால்வீட்டை விட்டு வெளியேறி வடலூரில் சுற்றித்திரிந்த 2 மாணவிகள்இரவு ரோந்து சென்ற போலீஸ் சூப்பிரண்டு மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்
கணக்கு பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 2 மாணவிகள் வடலூரில் சுற்றித்திரிந்தனர். அவர்களை இரவு ரோந்து சென்ற போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடலூரில் 15 வயதுடைய 2 பள்ளி மாணவிகள் சீருடையுடன் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த போலீஸ் சூப்பிரண்டு, அந்த மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் அவர்களுக்கு கணக்கு பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால், டியூசன் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியதும் தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
மேலும் அவர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரி சென்று பகல் முழுவதும் அங்கு சுற்றித்திரிந்ததும், பிறகு இரவு வீட்டுக்கு சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து கடலூர் வந்து, வடலூருக்கு பஸ் ஏறி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்க கஷ்டமாக இருந்தால் பெற்றோரிடம் கூறி தீர்வு காண வேண்டும். அதை விடுத்து இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
பின்னர் இரவு ரோந்து பணியில் இருந்த மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழியை உடனடியாக வரவழைத்து, மாணவிகளை பாதுகாப்புடன் தங்க வைத்து, மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மூலம் மாணவிகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு, மாணவிகளின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.