பொங்கல் பண்டிகைக்கு 2 கரும்புகள் வழங்க வேண்டும்- ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.


பொங்கல் பண்டிகைக்கு 2 கரும்புகள் வழங்க வேண்டும்- ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 24 Dec 2022 7:30 PM GMT (Updated: 24 Dec 2022 7:30 PM GMT)

பொங்கல் பண்டிகைக்கு 2 கரும்புகள் வழங்க வேண்டும் என ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.

நாகப்பட்டினம்

பொங்கல் பண்டிகைக்கு 2 கரும்புகள் வழங்க வேண்டும் என ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.

எம்.ஜி.ஆர். நினைவு தினம்

நாகையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அங்கு நடந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ஜீவானந்தம், நகர செயலாளர் தங்க.கதிரவன், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஜெயலலிதா உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் ஏமாற்றம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ.2 ஆயிரத்து 500, பொங்கல் பொருட்களுடன், முழு கரும்பும் வழங்கப்பட்டது.

ஆனால் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதை காரணம் காட்டி இந்த ஆண்டு பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கையை அழித்து விட்டது

முந்தைய ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்தோம். இதனால் கரும்பு சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் செய்தனர்.

எப்படியும் அரசு கரும்பை கொள்முதல் செய்துவிடும், உரிய தொகையும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் இன்றைய தி.மு.க. அரசு கரும்புகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் நம்பிக்கையை அழித்துவிட்டது. கரும்பு வழங்கப்படாததால் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் நலனை காக்க தி.மு.க. அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து பொங்கல் பண்டிகைக்கு 2 கரும்புகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேதாரண்யம்

வேதாரண்யம் சட்டசபை அலுவலகத்தில் பெரியார், எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. மலா் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவரி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் நமசிவாயம், ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், வக்கீல் சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் திலிபன், ஒன்றியக்குழு தலைவா் கமலா அன்பழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவா் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளா் அம்பிகாதாஸ், இளைஞா் பாசறை மாவட்ட செயலாளா் மாணிக்கவாசு, முன்னாள் நகர செயலாளர் ஜெகன்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story