2 காட்டு யானைகளை விரட்ட 3 கும்கி யானைகள் வரவழைப்பு


2 காட்டு யானைகளை விரட்ட 3 கும்கி யானைகள் வரவழைப்பு
x

திருப்பத்தூர் பகுதியில் 6 நாட்களாக சுற்றித்திரியும் 2 காட்டு யானைகளை விரட்ட 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர்

காட்டு யானைகள்

கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதனை வனத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் கடந்த 6 நாட்களாக யானைகள் முகாமிட்ட பகுதியில் கண்காணித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா தலைமையில் வனத்துறை காவலர்களும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து தினந்தோறும் 2 காட்டு யானைகளையும் காட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மாலை நேரத்தில் காட்டுப்பகுதிக்கு செல்லும் காட்டு யானைகள் மீண்டும் காலையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி அருகே உள்ள ஏரிகளில் குளித்ததுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன.

நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூர் அடுத்த அன்னாண்டப்பட்டி ஏரியிலிருந்து விரட்டப்பட்ட 2 காட்டு யானைகளும் நேற்று மீண்டும் திருப்பத்தூரில் இருந்து பெரிய ஏரி, வெங்களாபுரம் வழியாக ப.முத்தம்பட்டி ஊராட்சி திப்பசமுத்திரம் கிராமத்திற்கு சென்று முகாமிட்டுள்ளது.

3 கும்கி யானைகள் வரவழைப்பு

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் யானை முகாமிட்டுள்ள பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் 2 காட்டு யானைகளையும் காப்பு காட்டிற்கு விரட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கிற கும்கி யானையும், முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என்கிற கும்கி யானைகளும் நேற்று காலை வரவழைக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில்...

இந்த 3 கும்கி யானைகளும் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலையில் வந்ததும் 3 கும்கி யானைகளையும் குளிக்க வைத்து, அதற்கு தேவையான உணவு வழங்கி நேற்று மாலை வரை ஓய்வு எடுக்க வைத்தனர்.

அதன் பிறகு வனத்துறையினர் காட்டு யானைகள் முகாமிட்டுள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டு அதன்பிறகு கும்கி யானைகளை அழைத்து சென்று, காட்டு யானைகளை ஜவ்வாது மலை பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.


Next Story