2 தோல் தொழிற்சாலைகள் செயல்பட தடை


2 தோல் தொழிற்சாலைகள் செயல்பட தடை
x

வாணியம்பாடியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 2 தோல் தொழிற்சாலைகள் இயங்க தடை விதித்ததுடன், மின் இணைப்பையும் துண்டித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

கழிவுநீர் வெளியேற்றம்

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாணியம்பாடி பகுதியில் ஆய்வு செய்த போது வளையாம்பட்டு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அங்குள்ள கிணற்றில் வெளியேற்றி வருவது கண்டறியப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், தொழிற்சாலை அபாயகரமான பொருட்களை கையாள்வதற்குரிய உரிமம் பெறவில்லை என்பதும் தெரிய வந்தது.

அதேபோன்று வளையம்பட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவியது. மேலும் அபாயகரமான பொருட்களை கையாள்வதற்கு உரிமம் பெறவில்லை.

மின் இணைப்பு துண்டிப்பு

இதன் காரணமாக இந்த 2 தொழிற்சாலைகளையும் மூடவும், மின் இணைப்பை துண்டிக்கவும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பை துண்டித்து, தொழிற்சாலை இயக்கத்தையும் நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை கண்டால், பொதுமக்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு 80560 42227 என்ற எண்ணிலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை சுற்றுசூழல் பொறியாளருக்கு 80560 46133 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story