அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடும் வாக்குவாதம்


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடும் வாக்குவாதம்
x

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடும் வாக்குவாதம்

திருப்பூர்

அவினாசி

கூடுதல் வேலை செய்ய சொன்னதால் கருவலூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியைகள்

அவினாசியை அடுத்த கருவலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் தமிழ் ஆசிரியை மணிமேகலையிடம், உதவி தலைமை ஆசிரியை தனம், மாணவர்களுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர் வருகை பதிவேட்டில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மாணவர்களுக்கு சரிவர வகுப்பு எடுக்க முடியவில்லை, இதனால் பணிகளை செய்ய முடியாது என்று மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் தனத்தின் கணவர் விவேகானந்த செல்வக்குமார் செல்போனில் மணிமேகலையை தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதே பிரச்சினை மீண்டும் தொடர்ந்தது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் விவேகானந்த செல்வக்குமாரும், மணிமேகலையும் மாறி, மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், கண்காணிப்பாளர் குருமூர்த்தி ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் கூறும்போது " தலைமை ஆசிரியர் சத்திய பாமா கடந்த ஒரு வாரமாக விடுப்பில் உள்ளார். தற்போது ஆசிரியர்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் பணிகளுக்கு இடையே கூடுதலாக ஒரு சில பணிகள் சேர்ந்து செய்வது குறித்து எழுந்த சிறு மனக்கசப்பின் காரணமாக தான் ஆசிரியர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது" என்றார். மாணவர்களுக்கு கல்வி போதித்து, மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின் இதுபோன்ற செயல் வருத்தம் தருவதாக கல்வி ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


Next Story