2 ஆசிரியர்கள் பணி இடமாற்றம்
பள்ளி வளாகத்தில் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்ட 2 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கட்டிபுரண்டு சண்டை
கறம்பக்குடி அருகே வெட்டன் விடுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சந்தோஷ், தமிழ் ஆசிரியராக தமிழ்செல்வன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். மொழி பாட ஆசிரியர்களாக பணியாற்றும் 2 பேரிடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த 2 ஆசிரியர்களும் பள்ளி வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கட்டிபுரண்டு சண்டையிட்டனர். இதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியில் பதட்டத்துடன் நின்றனர். பின்னர் சக ஆசிரியர்கள் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்தனர்.
2 ஆசிரியர்கள் இடமாற்றம்
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை போதித்து முன்மாதிரியாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திலேயே சண்டையிட்டதை பலரும் கண்டித்து பதிவிட்டனர். இதையடுத்து வெட்டன் விடுதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய புதுக்கோட்டை கல்வி அதிகாரிகள் பள்ளியில் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்தோஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 ஆசிரியர்களையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டனர்.