ரூ.295 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 42 நவீன மின்மாற்றிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னை மாநகர் மற்றும் புறநகர் உள்பட 28 சட்டசபை தொகுதிகளில் ரூ.295.97 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 42 நவீன மின்மாற்றிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வி.பி.ராமன் சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நவீன மின்மாற்றியை (வளைய சுற்றுத்தர அமைப்பினை), தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
அத்துடன், சென்னை மாநகர் மற்றும் புறநகர் உள்பட 28 சட்டசபை தொகுதிகளில் ரூ.295.97 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 42 நவீன மின்மாற்றி நிறுவும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
28 சட்டசபை தொகுதிகள்
அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, சேப்பாக்கம், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், மாதவரம், மதுரவாயல், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், திரு.வி.க.நகர், திருவெற்றியூர், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், ஆலந்தூர், பூந்தமல்லி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்பதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 28 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் ரூ.787 கோடி மதிப்பீட்டில் வினியோக மின்மாற்றிகள் மற்றும் மின்வழிப்பாதைகளுக்கு புதிய 5 ஆயிரத்து 433 நவீன் மின்மாற்றி கருவிகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றுள், ஏற்கனவே 2 ஆயிரத்து 704 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் ரூ.391.94 கோடி செலவில் நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. மேலும், 2 ஆயிரத்து 42 நவீன மின்மாற்றி கருவிகள் ரூ.295.97 கோடி செலவில் நிறுவும் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து உள்ளார்.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் மற்றும் இராயப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் தற்காலிகமாக செயல்படுவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல். டெக் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல். அறக்கட்டளை, 'எச்.சி.எல். சமுடே' என்ற ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த முன்வந்துள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா மற்றும் எச்.சி.எல். அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர்.